தர்மசாலா: இமாச்சலப் பிரதேசத்தில் வானிலையில் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, அங்குள்ள மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், குலு, காங்க்ரா, மண்டி மற்றும் சம்பா மாவட்டங்களில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு எச்சரித்துள்ளது. குலு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நிலைமையைக் கவனத்தில் கொண்டு, மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். “தற்போதைய நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகம் பிறப்பித்த வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் இருந்து விலகி இருங்கள்” என்று அவர் கூறினார்.