புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும். வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.
வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ.40,000, இளம் கன்றுக்கு ரூ. 30,000 நிவாரண தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.