புதுடில்லி: ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் (EMRS) 7,267 ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் (EMRS) என்பது இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகும். நவோதயா வித்யாலயா பள்ளிகளைப் போலவே, இந்தப் பள்ளிகளும் பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியுடன், உணவு மற்றும் தங்குமிடத்தை இலவசமாக வழங்குகின்றன. இந்த அரசுப் பள்ளிகளில், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 7,267 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் முதல்வர் (225), பட்டதாரி ஆசிரியர் (3,962), விடுதிக்காப்பாளர் (635), இளநிலை செயலக உதவியாளர் (228), கணக்காளர் (61) மற்றும் உதவி அதிகாரி (1,606) போன்ற பல பதவிகள் அடங்கும். இந்தப் பணியிடங்கள் மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதீங்க.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்புகள் அல்லது பி.எட்., நர்சிங் போன்ற சம்பந்தப்பட்ட துறையில் உள்ள பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். வயது வரம்பைப் பொறுத்தவரை, முதல்வர் பதவிக்கு 50 வயதுக்குள்ளும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பொதுவாக 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 23, 2025 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் https://nesms.tribal.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (தாள் 1 மற்றும் தாள் 2), திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவணச் சரிபார்ப்பு போன்ற படிநிலைகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். எனவே, அரசுப்பணி வாய்ப்பைப் பெற விரும்பும் தகுதியானவர்கள் கடைசித் தேதிக்கு முன்னதாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து தயாராகலாம். வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. அருமையான வேலை வாய்ப்பு ஆகும்.