
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களை விட வீட்டு விலை உயர்வில் முன்னிலை பெற்றுள்ளது. 1 ஃபைனான்ஸ் வெளியிட்ட தகவலின்படி, பெங்களூருவில் வீட்டு விலைகள் 79 சதவீதம் அதிகரித்துள்ளன. இது மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி-NCR போன்ற நகரங்களை மிஞ்சிய அளவு ஆகும். இந்த உயர்வின் முக்கியக் காரணம் நகரத்தில் நிலவும் ஐடி துறையின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகியதுதான்.

பெங்களூருவில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது குறைந்துவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை உறுதி செய்கிறது. விலைகள் உயர்வதற்கான மற்றொரு காரணமாக, இந்த நகரத்தில் குறுகிய காலத்தில் வீடுகள் விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. வீட்டு வாங்கும் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
பெங்களூரு, உலகளாவிய ஐடி நிறுவனங்களின் இந்திய மையமாக திகழ்கிறது. அதே நேரத்தில், உள்ளூர் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களும் இந்த நகரத்தில் வளர்ந்து வருகின்றன. வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இளம் தொழில்நுட்ப ஊழியர்கள் நகரத்துக்குள் குடி பெயர்கின்றனர். இதனால், வீடுகளுக்கான தேவை பெருகி, அதன் பின்விளைவாக விலைகளும் மாறியுள்ளன.
தற்போது பெங்களூருவில் வீடுகள் சதுர அடிக்கு ரூ.10,349 என்ற சராசரி விலையில் விற்கப்படுகின்றன. மும்பை இன்னும் விலை உயர்ந்த நகரமாக இருந்தாலும், வீட்டு விலை அதிகரிப்பு வீதத்தில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் வீட்டு முதலீட்டு வாய்ப்புகளுக்கான முக்கிய நகரமாக பெங்களூரு வலுப்பெற்று வருகிறது.