லடாக் யூனியன் பிரதேசத்திற்கான புதிய இடஒதுக்கீடு மற்றும் இருப்பிடக் கொள்கைகளை மத்திய அரசு ஜூன் 3ஆம் தேதி அறிவித்தது. இந்த புதிய திட்டத்தின் கீழ், உள்ளூர்வாசிகளுக்கு 85 சதவீத வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. மேலும், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப்படும்.

லடாக்கில் ஆங்கிலம், இந்தி, உருது, போதி மற்றும் புர்கி மொழிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தானமான 370 ரத்து செய்யப்பட்டபின், லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. சட்டமன்றமில்லாத லடாக்கில், மக்கள் தங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்க அரசியல் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
இந்தக் காலக்கட்டத்தில், உள்ளூர் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 15 ஆண்டுகள் லடாக்கில் வசித்தவர்கள் அல்லது ஏழு ஆண்டுகள் படித்து பத்தாம் அல்லது பனிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுகிறார்கள். மேலும், மத்திய அரசு மற்றும் அதன் இணைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் வசிப்பிட சான்றிதழ் வழங்கப்படும்.
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் சட்டம், 1997ன் கீழ், பெண்களுக்கு இடஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்படும். லே மற்றும் கார்கில் ஆகிய இரு மலை மேம்பாட்டு கவுன்சில்களும் இதில் அடங்கும். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு தொடரும்.
லடாக் சிவில் சர்வீசஸ் திருத்த ஒழுங்குமுறை 2025-ன் கீழ், இவ்விடஒதுக்கீடுகள் மற்றும் சான்றிதழ்கள் பணி நியமனத்திற்காக மட்டுமே செல்லுபடியாகும். ஆங்கிலம், முந்தைய நிலைபோல் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். லடாக்கின் பிற தாய்மொழிகளான ஷீனா, ப்ரோக்ஸ்கட், பால்டி மற்றும் லடாக்கி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்புகள், உள்ளூர் மக்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.