திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ். அவர் 2010-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவரது மகன் சித்தார்த். (14) மாரடைப்பை சில நொடிகளில் கண்டறியும் மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளார். இது அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதிக்கப்பட்டது மற்றும் மாரடைப்பு ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மகேஷ், தனது மகனை சொந்த நாட்டுக்கு அழைத்து வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆப்பை சோதனை செய்ய விரும்பினார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. சர்க்காடியன் ஏஐ எனப்படும் இந்த செயலி, இதயத்துடிப்பு ஒலிகளை ஸ்மார்ட்போன் மூலம் பதிவு செய்து, ஆரம்ப கட்ட இதய நோய்களை துல்லியமாக கண்டறியும்.

ஒரே நாளில் சுமார் 700 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் ஏற்பாடுகள் குறித்து நேற்று அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சித்தார்த் சந்தித்தார். சித்தார்த் தனது கண்டுபிடிப்பை முதலமைச்சரிடம் நேரடியாக விளக்கினார். அப்போது ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணும் உடனிருந்தார். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: சிறுவன் சித்தார்த்தின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனை. அவர் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மாரடைப்புக்கான முடிவுகள் 96 சதவீதம் துல்லியமாக முன்கூட்டியே தெரிந்துவிடும். இந்தப் பயன்பாடு உலகின் முன்னணி ஏ.ஐ. மற்றும் ARM நிறுவனங்களின் சான்றிதழ். சிறுவனின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆந்திர அரசு முழு உறுதுணையாக இருக்கும் என்றார்.