உலகளாவிய கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், கரிம பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் கூட்டுறவு துறைகளை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கூட்டுறவு துறையின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூட்டுறவுத் துறை மாற்றப்பட வேண்டும். இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை உலகளாவிய கூட்டுறவுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். கரிம பொருட்களின் உற்பத்தியை ஏற்றுமதி சந்தையில் சிறப்பு கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

விவசாயம் தொடர்பான செயல்பாடுகளை விரிவுபடுத்த, ‘அக்ரிஸ்டாக்’ எனப்படும் டிஜிட்டல் பொது கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டும். பணப் பரிமாற்றத்தை எளிதாக்க விவசாயிகளின் கடன் அட்டைகளுடன் ரூபே யுபிஐ இணைக்கப்பட வேண்டும். விவசாய முறைகளை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் மண் பரிசோதனை செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவது அவசியம்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐஐஎம்களில் கூட்டுறவு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாம் வெற்றிகரமான கூட்டுறவுகளை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். செயல்திறன் அடிப்படையில் கூட்டுறவுகளை தரவரிசைப்படுத்தி போட்டியை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.