மத்திய அரசு, பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டத்தின் கீழ் சுமார் ₹10,907 கோடி நிதியை விடுவித்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், குடும்பங்களுக்கு மலிவு விலையில் தூய்மையான சூரிய ஆற்றலை வழங்குவதில் முன்னேற்றத்தை அடைவதாகும். 2025 செப்டம்பர் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் 5.79 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளன. இந்த நிதி, மேற்கூரை சோலார் மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கானதாகும்.

இந்த திட்டத்தின் கடன்கள், pmsuryaghar.gov.in என்ற தேசிய போர்ட்டல் வழியாக செயல்படுத்தப்படுகின்றன. பயனாளர்கள், முழுமையான டிஜிட்டல் முறையில் விண்ணப்பித்து, வெளிப்படையான முறையில் கடன் பெற முடியும். ₹2 லட்சம் வரை கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், நீண்ட கால திருப்பிச் செலுத்தும் வசதி, 6 மாத சலுகைக் காலம் போன்ற பல சலுகைகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு இதே போன்று மாநில மக்களுக்கு சோலார் பேனல்கள் நிறுவ உதவும் திட்டங்களை அறிவித்துள்ளது. https://www.pmsuryaghar.gov.in/ மற்றும் https://www.tnebltd.gov.in/usrp/applycfa.xhtml என்ற இணையதளங்களில் விண்ணப்பித்து, வீட்டிற்கு தேவையான மேற்கூரை சோலார் அமைப்புகளை நிறுவலாம். இதன் மூலம் வீட்டின் மின்சார தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்ய முடியும். மழை காலம் மற்றும் பனி காலங்களில் சிறிய அளவு மின்சார ஒதுக்கீடு மட்டுமே தேவைப்படும்.
மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு, 1 கிவா மீது ரூ.30,000, 2 கிவா ரூ.60,000, 3 கிவா ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படும். வீட்டிற்கு தேவையான சோலார் திறன் கணக்கீடு, அரசின் வழிகாட்டு செயலிகள் மூலம் செய்து, அரசு அங்கீகாரம் வழங்கும். இதனால், பயனாளிகள் மின்சார செலவை குறைத்து, பசுமையான மின்சார பயன்பாட்டை பெற்றுக்கொள்ளலாம்.