பெங்களூரு: தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பெங்களூரு 42-வது ஏசிஎம்எம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் (ஜேஎஸ்பி) துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த 42-வது ஏசிஎம்எம் நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.