கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால் நேற்று ராணுவ சீருடையில் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், “பார்க்கும் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் இன்னும் சிக்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி. இந்தியா இதுவரை கண்டிராத மோசமான பேரிடர்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே இழந்ததை மீண்டும் பெற முடியாது. ஆனால் இவர்களின் எதிர்காலத்துக்கு உதவ வேண்டும்’’ என்றார்.மோகன்லால் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.