தொழிலதிபர் கௌதம் அதானி, “இந்தியா தனது அடையாளத்தை உலகுக்கு தானே சொல்ல வேண்டும்; இல்லையெனில், பிறர் நம்முடைய வரலாற்றையும் மதிப்பையும் மாற்றி எழுதிவிடுவார்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற விஸலிங் வூட்ஸ் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் பேசிய அவர், “திரைப்படங்களும் கதைசொல்லலும் ஒரு நாட்டின் உலகப் பிம்பத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த கருவிகள். இந்தியா தனது உண்மையான கதையை தானே சொல்ல வேண்டும்” என்றார்.

அதானி, “நமது மௌனம் பணிவு அல்ல; அது சரணடைதல்” என்று கூறி, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘காந்தி’ போன்ற படங்கள் இந்தியாவை மேற்கத்திய பார்வையில் மட்டுமே சித்தரிப்பதை எடுத்துக்காட்டினார். “நமது துயரம் அவர்களின் காட்சிப் பொருளாக மாறிவிட்டது” என்றும் விமர்சித்தார்.
2023ஆம் ஆண்டின் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அவர் குறிப்பிட்டபோது, “ஒரு தவறான கதை எவ்வாறு பல தசாப்த உழைப்பை அழிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு அது” என்றார். “சில நாட்களில் எங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 100 பில்லியன் டாலர் அழிந்தது – உண்மைகள் தவறியதால் அல்ல, தவறான கதை ஆயுதமாக்கப்பட்டதால்” என்று தெரிவித்தார்.
அதானி மேலும் கூறியதாவது: “அமெரிக்கா ‘டாப் கன்’, ‘இன்டிபென்டன்ஸ் டே’, ‘ராக்கி’ போன்ற படங்கள் மூலம் தனது தேசிய பெருமையையும் ராணுவ வலிமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவும் தன் கலாச்சார வலிமையை உண்மையுடன் வெளிப்படுத்த வேண்டும்.”
சினிமாவின் எதிர்காலம் குறித்து பேசும்போது, AI மூலம் இயக்கப்படும் சினிமா இந்தியாவுக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும், இளம் படைப்பாளிகள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “பாரதத்தின் குரலை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றும் கூறினார்.
அவர் வலியுறுத்திய கடைசி செய்தி:
“நாம் யார் என்பதை நாம் சொல்லாவிட்டால், மற்றவர்கள் நாம் யார் என்பதை மாற்றி எழுதுவார்கள். உங்கள் தலைமுறை பாரதத்தின் குரல், அதன் பாடல் மற்றும் அதன் கதையை மீண்டும் உலகுக்கு தரட்டும்.”