குறைந்த மின் அழுத்த மற்றும் உயர் அழுத்த மின் துறையில் டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் உள்ள மின் இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக, மத்திய அரசின் உதவியுடன், 3 கோடி ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
19 ஆயிரம் கோடிக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 டெண்டர்கள் விடப்பட்டன. டெண்டரைப் பெற்ற நிறுவனம் நுகர்வோர் இடத்துக்குச் சென்று மீட்டர்களை நிறுவி பராமரிக்க வேண்டும். மேலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளில் இருந்து மின்கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திய பின், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தவும் திட்டமிட்டிருந்தது.
ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அதானி நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த டெண்டரை மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையை டெண்டரில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், விலையை மேலும் குறைக்க டெண்டரில் பங்கேற்ற அதானி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை வாங்க முடியாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விரைவில் மீண்டும் வெளியிடப்படும்’ என்றனர். இதனிடையே, நிர்வாக காரணங்களுக்காக மற்ற 3 பேக்கேஜ்களுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.