ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், ஸ்ரீநகருக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் ஸ்ரீநகரில் இருந்து மேலும் பல விமானங்களை இயக்கி வருகின்றன.

பஹல்காம் பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களின் உடல்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பணிகளில் மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் திடீரென உயர்வது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், விமான நிறுவனங்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவசர ஆலோசனை நடத்தினார்.
அலோசனையில், பயணக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்றும், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனம் தலா இரு விமானங்கள் என, டில்லி மற்றும் மும்பைக்கு மொத்தம் நான்கு கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன.
மேலும், ஏப்ரல் 30ம் தேதி வரை டிக்கெட் நேரங்களை மாற்றும் அல்லது ரத்து செய்யும் பயணிகளுக்கு கட்டணம் முழுவதுமாக திருப்பித் தரப்படும் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.