திருவனந்தபுரம்: கேரள அரசின் வருவாய்த்துறை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த பணிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய விதிமுறைகளை பின்பற்றி புதிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆறுகளுக்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிக்காக இந்த அறிக்கைகள் அடிப்படையாக இருக்கும்.2021 முதல் 2024 வரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 44 ஆறுகளில் 32 ஆறுகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 16 ஆறுகளில் மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 15 ஆறுகளில் மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆறுகளில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.மணல் அகழ்வுக்கு அனுமதி பெற்ற ஆறுகளில் குளத்துப்புழா, பம்பா, பெரியாறு, பாரதப்புழா, சாலியார், வாழப்பட்டினம் போன்றவை உள்ளன.
தடை செய்யப்பட்ட ஆறுகளில் நெய்யாறு, கரமனா, வாமனபுரம், மீனச்சில், கபனி மற்றும் அஞ்சரகண்டி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிவியல் மற்றும் சட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆய்வுகள் ஐந்தாண்டுகளுக்கொரு முறை புதுப்பிக்கப்படும்.இந்த நடவடிக்கையால் மணல் பற்றாக்குறை மற்றும் சூழலியல் சிக்கல்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.