ஆமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் விமானிகளின் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, எரிபொருள் விநியோகிக்கும் வழிகளை இயக்கும் பொத்தான்கள் முடக்கப்பட்டதால், இரண்டு இன்ஜின்களும் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில், கருப்புப் பெட்டியில் பதிவு செய்யப்பட்டிருந்த விமானிகளின் கடைசி நிமிட உரையாடல்களில், ஒரு விமானி மற்றவரிடம் “எரிபொருள் செல்லும் பாதையை ஏன் அடைத்தீர்கள்?” என்று கேட்பதும், அதற்கு “நான் அடைக்கவில்லை” என மறுப்பதும் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்கள் விபத்துக்கு வழிவகுத்த காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், இது முழுமையான முடிவு அல்ல என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்த அறிக்கையை வெறும் முதற்கட்ட விசாரணை அறிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், இதனை அடிப்படையாகக் கொண்டு இறுதி தீர்வுகள் கூறப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் விபத்துக்கான காரணத்தை தாங்களாகவே தீர்மானிப்பதோடு அவசரமான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இறுதி அறிக்கையின் பின்னர் மட்டுமே முழுமையான தெளிவை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் விமானப் பயணத்திற்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், தெளிவான முடிவுகள் வரும் வரை ஊடகங்களும் பொதுமக்களும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம். விமானிகள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மேலதிக விசாரணைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவே இறுதி அறிக்கை அமையும். அதன் பிறகே உண்மையான காரணங்களை அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியான நடைமுறையாக இருக்கும்.