புதுடில்லி: விமானிகளின் பணிநேர வரம்பை மீறி செயல்பட்டதால், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு, அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்தனர். அதில், ஏர் இந்தியா விமானங்களில் சோதனை நடத்தும் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

விமான நிறுவன மேலாளர் விதிகளை பின்பற்றவில்லை என தெரியவந்ததால், அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிறுவனம், எல்லை தொடர்பான வான்வெளி மூடல் அனுமதியின் தவறான விளக்கம் காரணமாக பிரச்னை ஏற்பட்டது, ஆனால் சரியான விளக்கம் கிடைத்ததும் திருத்தம் செய்யப்பட்டது, தற்போது விதிகளுக்கு இணங்க செயல்படுகிறோம் என்று தெரிவித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 10 மணி நேர உச்ச வரம்பை மீறி, இரண்டு பெங்களூரு-லண்டன் விமானங்களில் பைலட்டுகள் அதிக நேரம் பணியாற்றியதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசு விமான பாதுகாப்பு விதிகளை கடுமையாகக் கண்காணித்து வரும் நிலையில், இத்தகைய விதிமீறல்கள் விமானிகளின் பாதுகாப்பையும், பயணிகளின் நலனையும் பாதிக்கும் என்பதால், எதிர்காலத்தில் இது மீண்டும் நடைபெறாதவாறு நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.