தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சென்னை விமான நிலையம் தற்போது பயணிகளால் நிரம்பியுள்ளது. அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளதால், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு திரளாக மக்கள் புறப்படத் தொடங்கியுள்ளனர். இதனால், இன்று வெள்ளிக்கிழமை (அக்.17) முதல் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வழித்தடங்களில் வழக்கத்தை விட 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான டிக்கெட் விலை பெரிதும் அதிகரித்துள்ளது. உதாரணமாக, சென்னை–மதுரை வழித்தடத்தில் ரூ.3,000 அளவில் இருந்த டிக்கெட் விலை இன்று ரூ.17,000-ஐ தாண்டியுள்ளது. இதேபோல், சென்னை–மும்பை பயண கட்டணம் ரூ.3,300-இல் இருந்து ரூ.21,900 வரை உயர்ந்துள்ளது. தீபாவளி விடுமுறை காரணமாக மக்கள் பெருமளவில் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதால், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டதாக விமான நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
இந்த உயர்வுக்கு எதிராக, பல பயணிகள் விமான நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) உத்தரவை மீறியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். பண்டிகை காலங்களில் டிக்கெட் விலையை செயற்கையாக உயர்த்தக் கூடாது என்ற உத்தரவை மீறி, சில நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதேசமயம், அரசு அறிவித்த சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளும் நிறைந்த நிலையில் உள்ளதால், மக்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்க முடியாத சூழலில் உள்ளனர்.
பயணிகள் கூறுகையில், “ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டன. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானம் மட்டுமே வழியாக உள்ளது” என தெரிவித்துள்ளனர். இதனால், விமான டிக்கெட் விலை நாளை (சனிக்கிழமை) மேலும் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டிகை கால பயணத் திரளால், சென்னை விமான நிலையம் அடுத்த இரண்டு நாட்களில் சாதனை அளவுக்கு பயணிகளை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#