புதுடில்லி: முக்கிய ரயில் நிலையங்களில் விமான நிலையங்களைப் போல் எடை விதிமுறையை ரயில்வே கடுமையாக பின்பற்ற முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக பயணிகள் எடுத்து செல்லும் உடைமைகளுக்கான எடை வரம்பு இருந்தாலும், அது நடைமுறையில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. இப்போது பிரயாக்ராஜ், கான்பூர், மிர்சாபூர், அலிகாரி உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களில் புதிய எடைச் சோதனை அமல்படுத்தப்படுகிறது.

இலவசமாக எடுத்து செல்லக்கூடிய உடைமைகள்:
- ஏசி முதல் வகுப்பு பயணிகள் – 70 கிலோ வரை
- ஏசி இரண்டாம் வகுப்பு – 50 கிலோ
- ஏசி மூன்றாம் வகுப்பு / படுக்கை வசதி – 40 கிலோ
- பொது பெட்டி பயணிகள் – 35 கிலோ
இதற்கு மேல் எடை இருந்தால், பயணத்தைத் தொடங்கும் முன்பே லக்கேஜ் அலுவலகத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். அமரும் இடத்தை அடைக்கும் வகையில் இருந்தால் அபராதமும் விதிக்கப்படும். இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பெரிய பொருட்கள் இலவசமாக எடுத்து செல்ல முடியாது.
அதிகாரிகள் கூறியது:
இந்த நடைமுறை நெரிசலை குறைத்து, பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும். விமான நிலைய விதிமுறைகளைப் போல, ரயில்களில் ஒழுங்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.