புதுடெல்லி: பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை இந்தியாவின் முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்கள். இத்தகைய வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சொந்த தயாரிப்புகளை தங்கள் வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தடையை மீறி வால்மார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் அத்தகைய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பொருட்களை விற்கின்றன. இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் சில நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த நிறுவனங்கள் செயல்படுவதாகவும், அதன் மூலம் பொருட்களின் இருப்பு மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த வாரம், இதுபோன்ற புகார்கள் எதிரொலியாக, இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அன்னிய நேரடி முதலீட்டுச் சட்டத்தை மீறியது விற்பனையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை விசாரிக்கும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.