மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி-நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இன்றும், நாளையும் இரு தினங்கள் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த திருமண நிகழ்ச்சிக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, மாலத்தீவு உள்ளிட்ட உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
திருமண விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று மும்பை வந்தார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் இருந்து குடும்பத்துடன் நேற்று காலை மும்பை வந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் மும்பை வந்தார்.
நேற்றைய திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் வீரர் தோனி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, பாடகர்கள் அடில், லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், மல்யுத்த வீரர் ஜான் சினா, சவுதி அராம்கோ சிஇஓ அமீன் நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.