மும்பை: ரிலையன்ஸ் சிஇஓ முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ரத்திகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்காக பிரத்யேகமாக கடைகள் திறக்கப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாக உள்ளது.
அம்பானி குடும்ப திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், உள்ளூர் பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய அரசியல், விளையாட்டு, சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ரூ.5,000 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருமண விழாவில் தலைமை விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்கள் இலவசமாக ஷாப்பிங் செய்ய பிரத்யேக கடைகளும் அமைக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபரும் பாட்காஸ்ட் தொகுப்பாளருமான ரன்வீர் அல்லபாடியா, இந்திய-அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஆகாஷ் சிங்குடன் உரையாடலில் திருமணங்களில் இலவச பொருட்களை வழங்குவது பற்றி பேசினார். ஆகாஷ் சிங் மேலும் கூறியதாவது:
மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ஆனந்த் அம்பானி-ரத்திகா மெர்ச்சன்ட் திருமணம் மற்றும் திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிரியேட்டிவ் டைரக்டர் மணீஷ் மல்ஹோத்ராவின் கைவண்ணம் அந்த இடத்தை பழமையான வாரணாசி நகரமாக மாற்றியுள்ளது. நாங்கள் ஒரு மாய உலகில் இருப்பது போல் உணர்ந்தோம்.
பெண் விருந்தினர்களுக்காக பிரத்யேக வளையல் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல், வெர்சேஸ் பிராண்ட் சன்கிளாஸ் கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான கண்ணாடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் விருந்தினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். திருமண மண்டபத்தில் நகைக்கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் யாரும் தங்க நெக்லஸ்களை இலவசமாக தரமாட்டார்கள் என்று நகைச்சுவையாக கூறினார்.