பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 77 நாடுகளின் தூதர்கள் இன்று புனித நீராடினார்கள். பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, 77 நாடுகளின் தூதர்கள் பிரயாக்ராஜுக்கு வந்தனர். அவர்கள் விமானம் மூலம் வந்து பேருந்துகளில் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு அரசு சார்பில் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்று, இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திற்கு ஆழ்ந்த பாராட்டு தெரிவித்தனர். அமைதி மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் அற்புதமான அனுபவம் என ஸ்லோவாக் தூதர் ராபர்ட் மாக்சியன் வர்ணித்தார். இதேபோல், அர்ஜென்டினா மற்றும் ஜிம்பாப்வே தூதர்கள் நிகழ்வின் பொருள் மற்றும் இந்திய கலாச்சாரம் குறித்து பேசினர்.
பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் புனித சங்கமத்தில் 5.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் இன்று நீராடினர்.