இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தெரிவித்திருந்தாலும், பால் இறக்குமதி தொடர்பாக பரஸ்பர ஒப்புதல் எட்டப்படாமல் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலைக்குள் சென்றுள்ளன. அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்து செய்த நிலையில், இந்தியாவுடனான பேச்சு பால் பண்ணைத் துறையையே மையமாகக் கொண்டு இழுபறியாக உள்ளது.

அமெரிக்காவில் பசுக்களுக்கு பன்றி, மீன், நாய், குதிரை போன்ற விலங்குகளின் கொழுப்பு மற்றும் பாகங்கள் கலந்த உணவுகள் வழங்கப்படுவதால், அங்குள்ள பால் மற்றும் பால் பொருட்கள் ‘அசைவ பால்’ என இந்தியா கருதுகிறது. இந்தியா சுத்த சைவ உணவு முறையை பின்பற்றும் நாடாக இருப்பதாலும், பசுக்களுக்கு கலாசார முக்கியத்துவம் இருப்பதாலும், அமெரிக்க பால் இறக்குமதி குறித்து தீவிர எதிர்ப்பு நிலை வகித்து வருகிறது. கோவில்களில் பால், நெய் போன்றவை மத சடங்குகளுக்காக பயன்படுத்தப்படுவதால் கூட, அமெரிக்க பால் பொருட்கள் ஏற்க முடியாது என இந்தியா வலியுறுத்துகிறது.
இந்தியாவின் எதிர்ப்பிற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் பொருளாதாரம். அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில், உள்ளூர் சந்தையில் பால் விலை சரிவடையும். இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப்படி, ஆண்டுக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு பால் உற்பத்தி குறைந்தபட்சம் 15 சதவீதம் குறையும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகும் வகையில், அசைவ உணவுகள் வழங்கப்படாத பசுக்களிடமிருந்து பெறப்பட்ட பால், பால் பொருட்கள் என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இறக்குமதியை பரிசீலிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டு இந்தியாவில் 23.93 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், பால் பண்ணைத் துறை கிராமப்புற வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், கலாசாரமும் பொருளாதாரமும் ஒன்றாக இணைந்து, அமெரிக்க பால் இறக்குமதிக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது.