வாஷிங்டன்: உலக அரசியல் மத்தியில் நீண்ட காலமாக பதற்றத்துடன் இருந்த அமெரிக்கா-ரஷ்யா உறவுகள் தற்போது மீண்டும் நிலைபெறத் தொடங்கியுள்ளன என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அணுசக்தித்துறை ஊழியர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, அவர் இந்தக் கருத்துகளை பகிர்ந்தார்.
புடின் கூறுகையில், “உலகில் சில நாடுகள் இறையாண்மையை மதிக்காமல் செயல்படுகின்றன. ஐரோப்பா இன்று உண்மையான சுதந்திரம் கொண்ட நிலை அல்ல. இது ரஷ்யாவிற்கு ஏற்றதாக இல்லை. ஒரு நாடு தனது இறையாண்மையை இழந்துவிட்டால், அதன் அடையாளமே மங்கிவிடும்” எனக் கூறினார். இது அவரின் நீண்ட நாள் அரசியல் நோக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உக்ரைன் யுத்தம், நேட்டோவின் விரிவாக்கம், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் ஆகியவை ரஷ்யா-அமெரிக்கா உறவுகளை கடுமையாக பாதித்தன. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளும் பரஸ்பர விமர்சனங்களில் ஈடுபட்டு வந்தன. ஆனால் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் வருவதாக உருவாகியிருக்கும் சூழ்நிலை, ரஷ்யாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு வெளிச்சம் இருப்பது போல இப்போது நிலைமை தெரிகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.