பாட்னா: “பீஹார் சட்டசபை தேர்தலை நிதிஷ் குமாரை முன்னிறுத்தியே எதிர்கொள்கிறோம். வெற்றிக்குப் பிறகு கூட்டணி கட்சிகள் ஒன்றாக அமர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வர்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 6-ஆம் தேதி 121 தொகுதிகளிலும், 11-ஆம் தேதி 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில், பா.ஜ., மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளிலும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ்–ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கிறது.
அமித் ஷா கூறியதாவது:
“கூட்டணி தர்மத்தைப் பின்பற்றி, கடந்த தேர்தலில் நிதிஷ் குமாரையே முதல்வராக்கினோம். அவரின் உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை. பீஹார் மக்கள் லாலு யாதவ் ஆட்சியை விரும்பவில்லை. காங்கிரசின் ஆணவம் பல மாநிலங்களில் அதின் செல்வாக்கை குறைத்துவிட்டது,” என்றார்.
இதேவேளை, ‘மகாகத்பந்தன்’ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பூபேஷ் பாகேல், அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோர் அறிவித்துள்ளனர். தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.