புதுடில்லி: ஜிஎஸ்டி மறுசீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி முன்பைவிட வேகமாக நடைபெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் வரி குறைக்கப்பட்டுள்ளதால், இது மக்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், பால் பொருட்கள், சோப்பு, பல் துலக்கும் பேஸ்ட், பிரஷ், தலைக்கு எண்ணெய், ஷாம்பூ போன்ற அன்றாட உபயோகப் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, மூத்த குடிமக்கள் திட்டங்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் அனைத்திற்கும் பூஜ்ஜிய அல்லது குறைந்தபட்ச ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் சேமிப்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை கொண்டுவரும் என அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், பெண்களும், ஏழைகளும் இந்த வரி சீர்திருத்தத்தால் அதிக நன்மை பெறுவார்கள். விவசாய உபகரணங்களில் வரி குறைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகமாக உள்ளனர். அத்துடன், வாகனங்கள் மற்றும் பல்வேறு உபயோகப் பொருட்களை மக்கள் சுலபமாக வாங்க முடியும். இந்த சீர்திருத்தம் தன்னம்பிக்கையை உயர்த்தும் என்றும், மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விரும்பி பயன்படுத்துவார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி தற்போது எளிமைப்படுத்தப்பட்டு, இன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மக்கள் செலவினம் குறைவதோடு சேமிப்பு அதிகரிக்கும், அதே சமயம் இந்தியா உலகின் மிகவும் வளமான நாடாக மாறும் பாதையில் வேகமாக நகரும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.