புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் அவமானகரமானது என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் போஸ்டில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நேற்றைய பேச்சு முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது.
இந்த விஷயத்தில், அவர் தனது கட்சித் தலைவர்களையும் கட்சியையும் மிஞ்சினார். அவரது பேச்சில் வெறுப்பின் கசப்பு இருந்தது. ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தான் மரணம் அடைவேன் என்று பிரதமர் மோடியை தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல் நல விஷயங்களில் இழுத்துள்ளார்.
பிரதமர் மோடி மீது காங்கிரசுக்கு எவ்வளவு வெறுப்பும், பயமும் இருக்கிறது என்பதையும், அவர்கள் எப்படி பிரதமர் மோடியைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.
பிரதமர் மோடி, கார்கேக்காக பிரார்த்தனை செய்கிறேன், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் அனைவரும் பிரார்த்திக்கிறேன். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047-க்குள் வளர்ந்த இந்தியா உருவாகும் வரை வாழட்டும்” என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) கலந்து கொண்டார்.
மேடையில் பேசிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஓடி வந்து உதவி செய்தனர். தண்ணீர் அருந்தி சகஜ நிலைக்கு திரும்பிய கார்கே, மேடையில் தனது பேச்சை தொடர்ந்தார்.
வேகமாக பேச்சை முடித்தார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரை இருக்கையில் அமர வைத்தனர். அப்போது கார்கே, “காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கப் போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. நான் சீக்கிரம் சாக மாட்டேன்.
பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன்,” என்றார். கார்கேவின் பேச்சுக்கு அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.