சென்னை: விமானியின் திறமையால் விமானம் ஆபத்தில் இருந்து தப்பியதுடன், 154 பயணிகள் உட்பட 162 பேர் உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று மாலை 3.50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 154 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உட்பட 162 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
இந்நிலையில் விமானத்தை தொடர்ந்து இயக்குவது மிகவும் ஆபத்தானது என கருதி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விமானத்தை உடனடியாக சென்னை திரும்பி தரையிறக்குமாறும், சென்னை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, விமானம் நேற்று மாலை 4.28 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
விமானம் பழுதுபார்க்கப்படும் அல்லது மாற்று விமானம் மூலம் அனைத்து பயணிகளும் கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர். விமானி நடுவானில் இயந்திரக் கோளாறை உடனடியாகக் கண்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுத்து 154 பயணிகள் உட்பட 162 பேரின் உயிரைக் காப்பாற்றினார். இந்த சம்பவம் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.