மும்பை: பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி அளித்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.
3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.
அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார். இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார். தொழிலதிபர் ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு ரிச்சர்ட் மில் RM 003 V2 ஆசிய எடிஷன் கைக்கடிகாரத்தை பரிசளித்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடியாகும். உலகிலேயே இந்த எடிஷனில் 12 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.