அந்தமானை அழகுக்காக மட்டுமே பார்ப்பது காலம் கடந்தது. இப்போது அந்தமான் நிகோபார் தீவுகளை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிலும், ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக மாற்ற மத்திய அரசு முனைந்துள்ளது.
ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகளை கண்டுபிடிக்க ஓஎன்ஜிசி ஆழ்துளையிடும் பணிகளை துவக்கியுள்ளது. 1980களிலேயே இந்திரசாஸ்த்ரா என்ற பெயரில் இங்கு இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. 2016ல் ஹெல்ப் (Hydrocarbon Exploration & Licensing Policy) மூலம் தேடல் மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆசியான் நாடுகள் நிலக்கரியை நம்பியிருக்கின்ற நிலையில், இந்தியா எல்.என்.ஜி. (Liquefied Natural Gas) மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை (Act East Policy) மற்றும் ஆசியான் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அந்தமான் முக்கிய பங்காற்றும். அடுத்த பத்து ஆண்டுகளில் உலக எரிசக்தி தேவையில் 25 சதவீத பங்கு தென்கிழக்கு ஆசியாவுக்கே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் 1.84 லட்சம் கோடி லிட்டர் கச்சா எண்ணெய் கிடைக்கக்கூடும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். இதனால் இந்தியாவின் 80 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் 50 சதவீத எரிவாயு இறக்குமதி குறைக்கப்படலாம். ஏன் இத்தனை தாமதம் ஏற்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மியான்மர் மற்றும் வங்கதேசம் வழியாக குழாய் அமைத்து எல்.என்.ஜி. விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவை எரிசக்தி ஏற்றுமதி மையமாக மாற்றும். வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நிலக்கரியிலிருந்து சுற்றுச்சூழலுக்கேற்ப எரிசக்திக்கு மாற ஆர்வமாக உள்ளன.
மொத்தத்தில் அந்தமான் ஒரு சுற்றுலா தளம் என்ற பார்வையில் இருந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தூய்மையான எரிசக்தி கூட்டாண்மை நோக்கத்தை நிறைவேற்றும் அமுதசுரபி ஆக மாற இருக்கிறது.