மும்பை: இந்திய தொழில்துறையில் ஒருகாலத்தில் முன்னணி நிலை பெற்றிருந்த அனில் அம்பானி தற்போது தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறார். முகேஷ் அம்பானி வெற்றியை நோக்கிச் சென்று நாட்டின் முதலிட பணக்காரராக திகழ்கின்ற நிலையில், அவரின் தம்பி அனில் அம்பானி தொழில் துறையில் கடுமையான பின்னடைவுகளால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2000 கோடிக்கும் மேல் கடன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியது. அதன் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
எஸ்பிஐ அளித்த புகாரின் படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற கடனை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில், 17,000 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக பல வங்கிகள் புகார் அளித்துள்ளன.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. அனில் அம்பானி மீது ஏற்கனவே அமலாக்கத்துறை (ED) வழக்குப் பதிவு செய்திருந்தது. அப்போது 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார்.
தற்போது சிபிஐ தரப்பும் நடவடிக்கை எடுத்துள்ளதால், அனில் அம்பானிக்கு எதிரான வழக்குகள் மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது திவால் சட்டத்தின் கீழ் விசாரணை நடைமுறையில் உள்ளது.
இந்த சம்பவம், ஒருகாலத்தில் முகேஷுடன் போட்டியிட்ட அனில் அம்பானியின் தொழில் வாழ்க்கை எப்படி வீழ்ச்சியடைந்தது என்பதற்கான வெளிப்படையான உதாரணமாக பார்க்கப்படுகிறது.