மும்பையில் ஒருவர் பகிர்ந்த அனுபவம் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. அவர் இந்தியாவில் ஆப்பிள் மேக்புக் வாங்குவதற்குப் பதிலாக வியட்நாம் சென்று வாங்கியுள்ளார். அதிர்ச்சி தரும் விதமாக, விமானக் கட்டணம், ஹோட்டல் செலவுகள், உணவு, விசா என அனைத்தையும் சேர்த்தாலும், இந்தியாவில் வாங்கும் விலையை விட குறைவாகவே வந்ததாக கூறியுள்ளார்.

அந்த ரெடிட் பயனர் இந்தியாவில் கார்டு சலுகைகளுடன் மேக்புக் 1.85 லட்சம் ரூபாய்க்கு இருந்தது என கூறினார். ஆனால் வியட்நாமில் அதே மேக்புக்கை பில் பெற்று வாங்கி, விமான நிலையத்தில் VAT வரியைத் திரும்ப பெற்றபின், வெறும் 1.48 லட்சத்திற்கே கிடைத்ததாகப் பதிவிட்டார். இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.36,500 சேமிப்பு ஏற்பட்டது.
அவர் 11 நாட்கள் வியட்நாமில் குறைந்த பட்ஜெட் சுற்றுலாவும் செய்துள்ளார். விமான டிக்கெட் 19,000 ரூபாய், இ-விசா 2,210 ரூபாய், தங்குமிடம் 4,000 ரூபாய், உணவு மற்றும் பிற செலவுகள் 5,000 ரூபாய் என மொத்தம் ரூ.1.97 லட்சத்திலேயே பயணத்தையும் லேப்டாப்பையும் முடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வாங்குவதை விட வெறும் ரூ.12,000 அதிகமாக செலவிட்டும் முழு சுற்றுலா அனுபவம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் இது பட்ஜெட் பயணமாக இருந்ததால் சாத்தியமானது. ஒருவருக்கு சவுகரியமான பயணம் வேண்டும் என்றால் குறைந்தது ரூ.72,000 கூடுதலாக செலவாகும். அப்படி பார்த்தால் மொத்த செலவு சுமார் 2.20 லட்சம் ரூபாயாகும். அந்த நிலைமையில் பணச் சேமிப்பு குறைந்து விடும்.
முடிவாக, பட்ஜெட் பயணத்தைத் திட்டமிடும் பயனர்களுக்கு வியட்நாமில் மேக்புக் வாங்குவது சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கலாம். ஆனால் சவுகரியமான பயணம் விரும்புவோருக்கு கூடுதல் செலவாகும்.