ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளார். கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் காரணம் காட்டி அவர் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் இது பாஜக அழுத்தத்தால் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டின. மேலும், அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி இன்னும் நிலவுகிறது.

தன்கர் 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அக்காலத்தில் பெற்ற ஓய்வூதியத்தை 2019ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படும் வரை தொடர்ந்து பெற்றார். ஆனால் ஆளுநர் பொறுப்பு ஏற்ற பிறகு அந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. தற்போது துணைத் தலைவர் பதவியை விட்டு வெளியேறியதால் மீண்டும் ஓய்வூதியத்துக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.
74 வயதான தன்கருக்கு மாதம் ரூ. 35,000 ஓய்வூதியத்துடன், 70 வயதுக்கு மேற்பட்டதால் கூடுதலாக 20% வழங்கப்படும். இதனால் மொத்தம் ரூ. 42,000 ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. அதோடு மருத்துவம், பயணம் உள்ளிட்ட சலுகைகளும் சேர்க்கப்படும். முன்னாள் குடியரசு துணைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளின் ஓய்வூதியத்துடன், இப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ஓய்வூதியமும் சேர்க்கப்படும்.
அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, ராஜினாமா செய்த நாளிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஜகதீப் தன்கர் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. எதிர்கட்சிகள் தொடர்ந்து அவர் ராஜினாமாவின் உண்மையான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.