புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வக்பு சட்ட திருத்த மசோதாவில் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களை ஏற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாட்டின் முஸ்லிம் அறக்கட்டளை சொத்துகளின் மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் வகையில், வக்பு வாரிய சொத்துகள் பதிவு மற்றும் அதன் முறையான நிர்வாகத்தை உறுதிசெய்ய மசோதா உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும் கொண்ட குழு, 6 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதில், 66 மாற்றங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், 15-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் 23 மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அமைச்சரவை 14 முக்கிய திருத்தங்களை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்களில், முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள், இரண்டு முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவரை வக்பு கவுன்சிலில் சேர்ப்பது, மற்றும் முஸ்லிம் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை வக்பு தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இடம் பெறச் செய்வது அடங்கும்.
மேலும், ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா, அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியர் அல்லாமல், மாநில அரசு நியமிக்கும் அதிகாரி தீர்மானிப்பார். அதேபோல், வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட 6 மாத அவகாசம் அளிக்கப்படும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற உள்ள நிலையில், இந்த மசோதா அந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இருக்கிறது.