லக்னோ: லக்னோவில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், “எந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்க ஆயுதப்படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். அமைதியை நிலைநாட்ட ராணுவம் தயாராக இருக்க வேண்டும். ‘உலகம் ஒரே குடும்பம்’ என்பது இந்தியாவின் நீண்டகாலத் தத்துவம். இந்தியா அமைதிக்காக வாதிடும் அதே வேளையில், உள்நாட்டிலும் உலக அளவிலும் அமைதியை நிலைநாட்ட மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும்.
சர்வதேச விவகாரங்களைக் கருத்தில் கொண்டு ராணுவத்தின் தயார்நிலை வலியுறுத்தப்பட்டது,” என்றார்.
முன்னதாக, லக்னோவில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டின் தொடக்க அமர்வுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அப்போது மூத்த ராணுவ அதிகாரிகளிடம் பேசிய அவர், “எதிர்கால சவால்களை எதிர்கொள்ள முப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது.
ஆயுதப் படைகள் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், ‘தன்னம்பிக்கை இந்தியா’ என்ற பார்வைக்கு பங்களிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளன. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது.
எனினும், அந்த அமைதியைப் பேணுவதற்கு இராணுவத் தயார்நிலை முக்கியமானது. இராணுவத் தளபதிகளுக்கு முப்படைகளின் கூட்டு நடவடிக்கை பற்றிய பார்வை இருக்க வேண்டும். எதிர்கால ஆத்திரமூட்டல்களுக்கு விரைவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்க உத்திகளை உருவாக்குங்கள்.
ரஷ்யா-உக்ரைன் மோதல்கள், இஸ்ரேல்-ஹமாஸ் பதட்டங்கள் மற்றும் பங்களாதேஷின் நிலைமை ஆகியவற்றிலிருந்து நாம் பாடம் எடுக்க வேண்டும்.
இதுபோன்ற மோதல்களை மதிப்பிடுவதற்கும், இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்நோக்குவதற்கும், எதிர்பாராதவற்றைச் சமாளிக்கத் தயாராக இருப்பதற்கும் தளபதிகளுக்கு பொறுப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.