புனே: கார்கில், கால்வான், சியாச்சின் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இந்திய ராணுவம் அனுமதி அளித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், புதிய அரசு, சுற்றுலா துறையை பெரிதும் மேம்படுத்தியுள்ளதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று தெரிவித்தார். அதன்பின், அந்த பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த 48 முக்கிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்திய ராணுவம் சாகச நடவடிக்கைகளை அதிகரிக்க உள்ளது. பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மலையேற்றம் போன்ற சாகச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உதாரணமாக, இமாலய மலையேற்றம், உத்தரகாண்டில் ‘சோல் ஆஃப் ஸ்டீல்’ மலையேற்றம், சியாச்சின் பனிப்பாறை பகுதியில் மலையேறும் பயிற்சி போன்றவற்றை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கார்கில், கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் சியாச்சின் பனிப்பாறை போன்ற பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு போர் அனுபவங்களை நேரில் காண இந்திய ராணுவம் திறக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய ஏற்பாடுகள் மூலம், இந்திய ராணுவம் சுற்றுலாவை மேம்படுத்துவதையும், இப்பகுதியின் அழகு மற்றும் போர் அனுபவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.