ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பா.ஜ.க. 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 இடங்களில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே 2 கட்ட பட்டியலை வெளியிட்டது. 40 பேர் கொண்ட 3-வது இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தனித்து களம் இறங்க முடிவு செய்தது.
90 தொகுதிகளுக்கும் பல்வேறு கட்டங்களாக அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, புதிய மதுக்கொள்கையை மீறியதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, அவர் இன்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து பிரதாப் சிங் பஜ்வா கூறியதாவது; ஜாமீன் மற்றும் தேர்தல் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். இது நீதிமன்றத்தின் நடைமுறை. அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்தியக் குடிமகன் போல நீதிமன்றத்தை அணுகிய அவர், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அவருக்கும் ஹரியானா தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஹரியானா தேர்தலை நிச்சயம் பாதிக்காது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் அவர்களை பாதிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் அனைத்து நிறுவனங்களின் முறைகேடுகளும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றார்.