பெங்களூரு: பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது. மேம்பாலத்தை திறந்து வைத்த துணை முதல்வர் சிவக்குமார் மேம்பாலத்தில் காரை ஓட்டிச் சென்றார்.
பெங்களூரு ராக்கிகுட்டா – மத்திய பட்டு வாரியம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3.36 கி.மீ தூரதிற்கு ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது முதல் பாலத்தில் வாகனங்களுக்கும், இரண்டாவது பாலத்தில் மெட்ரோ ரயில்களுக்கும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள்
கடந்த 15ம் தேதி மேம்பாலம் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மேம்பாலம் திறக்கப்படவில்லை. இந்த மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, ஜூலை 17ம் தேதி புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை துணை முதல்வர் சிவக்குமார் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மதியம் 3:00 மணிக்கு ராகி குட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவக்குமார் பங்கேற்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு ராகி குட்டாவில் இருந்து மத்திய பட்டு வாரியத்துக்கு காரை சிவக்குமார் ஓட்டினார். காரின் முன் இருக்கையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இருந்தார்.
நிகழ்ச்சியில் பொம்மனஹள்ளி பா.ஜ.க. — எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகு, சோதனை அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. புதிய மேம்பாலத்தில் நேற்று சில வாகனங்கள் சென்றன.
சிவக்குமார் ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழாவில் பேசியதாவது:
ராகிகுடா — மத்திய பட்டு வாரியத்திற்கு இடையே புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளேன். இந்த மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவது சவாலாக இருந்தது. இந்த மேம்பாலம் கட்டும் பணி செலவு அதிகம் என்றாலும், போக்குவரத்தை எளிதாக்க இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மெட்ரோ நிர்வாகம்
ஈரடுக்கு மேம்பாலத்திற்கான செலவை பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் மேலாண்மை கழகம் பகிர்ந்து கொள்ளும். ஈரடுக்கு மேம்பாலம் மூலம் ஓசூர் சாலை நோக்கி செல்லும் 30 சதவீத வாகன ஓட்டிகள் பயனடைவார்கள்.
வரும் நாட்களில், ஈரடுக்கு மேம்பாலம் மாதிரி மெட்ரோ ரயில் பாதைகள் பின்பற்றப்படும். ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி முக்கிய பங்கு வகித்தார். பெங்களூரில் ரூ.5,475 கோடியில் 9.50 கி.மீ.க்கு ஐந்து வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும். பெங்களூரு நகருக்காக சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
ஆலோசனை
இது குறித்து ஆலோசிக்க வரும் 27ம் தேதி பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்த உள்ளோம். பிராண்ட் பெங்களூரு திட்டத்தை சிவகுமாரால் செயல்படுத்த முடியாது என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அவர் என்னை விட மூத்தவர். அவரைப் பற்றி அதிகம் பேச மாட்டேன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். பெரிய திட்டங்களை நிறைவேற்ற பலரிடம் ஆலோசனை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.