இந்திய ரயில்வே வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்திருப்பவர் சுரேகா யாதவ். ஆசியாவின் முதல் பெண் லோக்கோ பைலட்டாக அவர் சாதனை படைத்தார். கடந்த 36 ஆண்டுகளாக பணியாற்றிய பிறகு, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறார். தனது ஓய்வுக்கு முன்னர் சக ஊழியர்களும், குடும்பத்தினரும், அதிகாரிகளும் அவருக்கு அன்பான கௌரவத்தை வழங்கினர்.
மத்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், சுரேகா யாதவ் உண்மையான முன்னோடியாக தடைகளை உடைத்து, எண்ணற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருந்தார் என பாராட்டியுள்ளது. சமீபத்தில் அவர் ஹஸ்ரத் நிஸாமுத்தீன் – மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ் (22222) ரயிலை ஓட்டி, தனது நீண்ட சேவையை நினைவுகூர்ந்தார்.

சமூக வலைதளத்தில் தொழில்துறை மன்னன் ஆனந்த் மகிந்திரா, சுரேகாவை வாழ்த்தியுள்ளார். “நீங்கள் ஒரு முன்னோடி. உங்கள் சேவை என்றும் மறக்கப்படாது. மாற்றத்தை உருவாக்கிய பெண்கள் எப்போதும் கொண்டாடப்பட வேண்டும்” என்று அவர் பதிவு செய்துள்ளார்.
சுரேகா யாதவ் தனது பயணத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார். பெண்கள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியாதது இல்லை என்பதை தனது வாழ்க்கையால் நிரூபித்துள்ளார். அவரது பெயர், இந்திய ரயில்வே வரலாற்றில் என்றும் பொற்குறியீடாக நிற்கும் என்பதில் ஐயமில்லை.