புது டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் கொண்ட குழு ஜூன் 25 அன்று டிராகன் விண்கலத்தில் அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது.

விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20 நாள் தங்கிய பிறகு ஜூலை 15 அன்று பூமிக்குத் திரும்பினார். அவரது பயணம் நாசா, ஸ்பேஸ்எக்ஸ், இஸ்ரோ மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தனியார் விண்வெளிப் பயண ஒத்துழைப்பான ஆக்ஸியம் மிஷன் 4-ன் ஒரு பகுதியாகும். இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டிய குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா நேற்று அதிகாலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பினார்.
இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரரும், சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட முதல் இந்தியருமான சுக்லாவை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்றும் அவரது மனைவி கம்னா மற்றும் மகன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.