ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்பு 65 பேரின் உயிரை பறித்தது. 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில் மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள், தோடா மாவட்டத்தில் நேற்று மீண்டும் மேக வெடிப்பு ஏற்பட்டது. அதனால் கனமழை கொட்டியதால் நிலச்சரிவு ஏற்பட்டது. வைஷ்ணவி தேவி கோவில் அருகே ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆரம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. பலர் படுகாயமடைந்ததால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கத்ரா அருகே கனமழையால் ஏற்பட்ட புதிய நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து பலர் மண் அடியில் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில மீட்புக் குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
மற்றுமொரு அதிர்ச்சித் தகவலாக, ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாசி, உதம்பூர், ரஜோரி, ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மீண்டும் மேகவெடிப்பு, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.