மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால், மேகவெடிப்பு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. ஜல்கான் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாதிப்பு நேரிடும் அபாயம் இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஆயுஷ் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே மூவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களம் இறங்கி உள்ளனர்.

மும்பை உட்பட ஜல்னா, பீட், நாந்தேட் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து, சுமார் 452 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், 2500 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டுச் சென்று தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜல்கான் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நான்கு தாலுகாக்களில் விவசாயிகள் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளனர். சேதத்தை நேரில் ஆய்வு செய்த நீர்வளம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கிரிஷ் மகாஜன், விவசாயிகளின் நிலைமை மற்றும் சேத மதிப்பீட்டைப் பார்வையிட்டார். அவர் விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மழையின் தீவிரம் தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேகவெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் எப்போது, எங்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்க உதவுகின்றன. மஹாராஷ்டிராவில் நிலைமை தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் அரசு அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.