லக்னோ: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு திருப்பதி லட்டு வழங்கப்பட்டதாக கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.
இதற்காக திருப்பதி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 கிலோ லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்படுவதைக் கண்டித்து, “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைஷ்ணவர்கள் தங்கள் உணவில் பூண்டு, வெங்காயம் கூட பயன்படுத்துவதில்லை.
எனவே பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பைச் சேர்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இந்து மத நம்பிக்கையை கேலி செய்வதாக உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்” என்றார்.
லட்டு சர்ச்சை பின்னணி: ஆந்திராவில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, 5 நிறுவனங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையில், அதாவது கிலோ ரூ.320 முதல் ரூ.411 வரை நெய் கொள்முதல் செய்தது.
இதில், திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் அனுப்பி வருகிறது. இதனால் லட்டுவின் தரம் வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தும், கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வரானார். இதையடுத்து திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை தேவஸ்தான செயல் அலுவலர் சியாமல் ராவ் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக சோதனை நடத்த சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு நெய் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. விசாரணை முடிவில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த நெய்யில் மீன் எண்ணெய், பசு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளதாக சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த விவகாரம் குறித்து உடனடியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.