சென்னை: மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ், கவரிப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) இரவு 8.27 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 19 பேர் காயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து, இரு திசைகளிலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாகவும், 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பிவிடப்பட்ட ரயில்கள்: கன்னியாகுமரி – நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் – 12641, சென்னை சென்ட்ரல் – லக்னோ ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் – 16093, சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் – 12611, ஹவுரா செல்லும் சென்னை சென்ட்ரல் மெயில் – 12839, அகமதாபாத் – சென்னை சென்ட்ரல் – பட்னா 5 டிரான்ஸ் 5 எக்ஸ்பிரஸ் – 22644, புது தில்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் – 12616, காக்கிநாடா துறைமுகம் – செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் – 17644 திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் – விஜயவாடா மற்றும் சென்ட்ரல் – விஜயவாடா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் – 12077 மற்றும் 12076 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம், ரயில்வே போலீசார், காவல் துறை மற்றும் மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கான தங்குமிடம், உணவு மற்றும் மாற்றுப் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.