ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பஷீர் அஹமது, பர்வேஸ் அஹமது என இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்தது. கைது செய்யப்பட்ட இவர்கள், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கூடுதல் தகவல்களை பெற இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று NIA கோரிக்கை வைத்தது. ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்றவாளிகள் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரும் திறந்தவெளியில் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சம்மதிக்காத வரை உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குற்றவாளிகளின் ஒப்புதல் அவசியம் என்றும் வலியுறுத்தியது.
இதனால், NIA-வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த முடிவு, சட்டப்பூர்வ நடைமுறைகளில் மனித உரிமையின் முக்கியத்துவத்தையும், குற்றவியல் விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாகவும் கருதப்படுகிறது.