பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் இருதரப்பும் போர் நிலைக்கு செல்லும் அளவுக்கு வளர்ந்தது. இதை அடக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இருதரப்புக்கும் அமைதியை வலியுறுத்தின. அதன் பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறைவுக்கு வந்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தம் குறித்து அறிவித்தன.

இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபரின் தலையீடு இருந்ததா என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. லோக்சபாவில் பேசிய மோடி, “இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் எந்த உலகத் தலைவரின் தலையீடும் இல்லை” என்று தெளிவாக தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அதே காலகட்டத்தில் மோடி மற்றும் டிரம்ப் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நிகழவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர், பிரதமரும் மத்திய அரசும் பொய் சொல்கின்றனர் என குற்றம் சாட்டினர். அதேசமயம், அமெரிக்க அதிபர் பொய் சொன்னார் என எந்தவொரு அமைச்சரும் வெளிப்படையாகக் கூறவில்லை என்பதே அவர்களது வாதம். இது ராகுலின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக மத்திய அரசு சார்பில் விமர்சனம் ஏற்பட்டது.
வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, நட்பு நாடான அமெரிக்காவின் அதிபரை பகிரங்கமாக பொய்யர் என பிரதமர் கூற முடியாது. இது உள்நாட்டு அரசியலில் முக்கியமான விவகாரமாக மாறியுள்ள நிலையில், வெளியுறவு கொள்கையில் நிதானமும், நுட்பமும் அவசியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.