புதுடில்லி: லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை பாஜ எம்பி கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். “இது ஒருவித நகைச்சுவை, மிகப் பழமையான குற்றச்சாட்டு. அவர்களுக்கு வளர்ச்சியில் எந்த ஆர்வமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

கங்கனா ரனாவத் தனது கருத்தில், பீஹார் மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டும் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஆனால் கர்நாடகா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதுபோல குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார். “நீங்கள் ஆதாரம் வைத்திருக்கிறீர்கள் என்றால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடருங்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது” என்றார்.
அதே சமயம், “இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம். இதனால் அவர்கள் அரசியலில் தோல்வியடைந்தவர்களாக மட்டுமே தெரிகிறார்கள். அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை” என கங்கனா தெரிவித்தார்.
மேலும், பாஜ எம்பி அனுராக் தாக்கூர், “ராகுலுக்கும் அவரது கட்சிக்கும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. சட்டவிரோத வாக்காளர்களைப் பாதுகாப்பது காங்கிரசின் கொள்கை. தோல்வியடையும் அச்சத்தால் ராகுல் தவறான கதையை உருவாக்கி வருகிறார். ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்” என்று வலியுறுத்தினார்.