பீஹாரை சேர்ந்த பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால், ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் செயல்படும் மதுபான ஆலைகளில் இருந்து அவருக்கு பணம் வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், கிஷோர் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உடன் இணைந்து பாஜக வாக்குகளை குறைக்கும் சதி செய்து வருவதாகவும் குறித்தார்.

அவர் கூறியதாவது, பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் தோற்றம் பற்றிய விவரங்களை மக்களை ஏமாற்றும் வகையில் தவறாக கூறுகிறார். 2022ஆம் ஆண்டு டில்லியில் கட்சி உருவாக்கப்பட்ட போதிலும், 2024இல் பீஹாரில் தொடங்கியதாக பொய் சொல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். சட்டவிரோத நிதி மற்றும் ஊழலில் கிஷோர் சிக்கியிருப்பதாகவும், விசாரணை நடந்தால் அவர் வெளிப்படுவார் என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “நான்கு நாட்களில் அவர் வழிக்கு வந்துவிடுவார். என்னை எவரும் சிறைக்கு அனுப்ப முடியாது” என்று தெரிவித்தார். மேலும், சஞ்சய் ஜெய்ஸ்வால் நடத்தும் பெட்ரோல் பங்கில் போலி பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், அதுகுறித்து பல புகார்கள் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளால் பீஹாரில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. பிரசாந்த் கிஷோர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது அரசியல் சதி மட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.