புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 30 வயதான பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். மார்ச் 10 ஆம் தேதி, தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக பஜ்ரங் புனியா தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து பஜ்ரங் புனியா மேல்முறையீடு செய்திருந்தார். தான் மறுத்ததற்கு விளக்கம் அளித்த அவர், “சிறுநீர் மாதிரியை வழங்க நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் நடைமுறைகளை நான் நம்பவில்லை, அதனால் நான் மறுத்துவிட்டேன்” என்று கூறினார்.
இந்நிலையில் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் இந்த காலகட்டத்தில் பஜ்ரங் புனியா எந்த போட்டியிலும் பங்கேற்கவோ, மல்யுத்த பயிற்சி அளிக்கவோ முடியாது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பஜ்ரங் புனியா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தவிர ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.