பெங்களூரு: ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், ஆசியாவிலேயே பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என டாம் டாம் டிராஃபிக் இன்டெக்ஸ் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பெங்களூருவில் வாகனங்கள் 10 கிமீ தூரத்தை கடக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது என்று அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பீக் ஹவர்ஸின் போது கூடுதலாக 132 மணிநேரம் போக்குவரத்தில் செலவிடப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. டாம் டாம் டிராஃபிக் இன்டெக்ஸ் ஆய்வின்படி, பெங்களூருக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் புனே இரண்டாவது இடத்தில் உள்ளது.
புனேவில் 10 கி.மீ தூரத்தை கடக்க 27 நிமிடங்கள் மற்றும் 50 வினாடிகள் ஆகும், பிலிப்பைன்ஸின் மணிலா 3-வது இடத்தையும், தைவானின் தைச்சுங் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. மணிலாவில் 10 கிலோமீட்டரை கடக்க 27 நிமிடங்கள் 20 வினாடிகளும், தைச்சுங்கில் 10 கிலோமீட்டரை கடக்க 26 நிமிடங்கள் 50 வினாடிகளும் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாம் டாம் டிராஃபிக் இன்டெக்ஸ் ஆய்வின்படி, உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம் லண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.